×

கலைஞர் நினைவிடம் கட்டுமான பணி 97% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கலைஞர் நினைவிடம் கட்டுமான பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின் முதல்வருடன் கலந்தாலோசித்து திறக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த அதிகனமழை காரணமாக 118 இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்தது. தற்காலிகமாக சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 நாட்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

தற்காலிக பணிக்கு ரூ..250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சாலைகளை நிரந்தரமாக சீர் செய்ய ரூ..475 கோடி தேவைப்படுகிறது. வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதை கட்டி முடிக்க அரசு உறுதியாக உள்ளது.

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 24 மாதத்திற்கு ஒப்பந்தம் போட்டிருந்தாலும் 18 மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு போதுமான அளவிற்கான நிலம் உள்ளது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் இதனை முதல்வர் திறந்து வைப்பார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிட கட்டுமான பணிகள் 97 சதவீதம் முடிவடைந்துள்ளது. அத்துடன் அண்ணா நினைவிடத்தையும் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதல்வருடன் கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலைஞர் நினைவிடம் கட்டுமான பணி 97% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,CHENNAI ,Minister ,AV Velu ,Chief Minister ,Chennai Chief Secretariat ,Thoothukudi, Tirunelveli ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம் வாழ்த்து!